

ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு
ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா, கடந்த 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தையொட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 8-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நல்லெண்ண தூதராக இருக்கும், ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா தலைமை தாங்கினார். அமைப்பின் நிறுவனத்தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார். இதில் தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், நடிகர் பாக்யராஜ் மற்றும் பிரபல தொழில் அதிபர்கள், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் இந்த ஆண்டுக்கான ரெயின்ட்ராப்ஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது 103 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள், 93 வயது சுதந்திர போராட்ட தியாகி லட்சுமி கிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
அதேபோல், சிறந்த ஆளுமைக்கான விருது இளம் வனத்துறை அதிகாரி சுதா ராமனுக்கும், சிறப்பு அங்கீகார விருது நாட்டின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மொண்டலுக்கும், சிறந்த நடிகைக்கான விருது ஊர்வசிக்கும், சிறந்த விளையாட்டு வீராங்கனைக்கான விருது இந்திய கூடைப்பந்து மகளிரணி கேப்டன் அனிதா பால்ராஜூவுக்கும், நம்பிக்கை விருது சென்னை ஐகோர்ட்டு முதல் பார்வை சவால் கொண்ட வக்கீல் கற்பகத்துக்கும், சிறந்த இயற்கை விவசாயிக்கான விருது திருப்பூரை சேர்ந்த பரிமளா தேவிக்கும், வீரத்துக்கான விருது சென்னை விமான நிலையத்தின் முதல் பெண் தீயணைப்பு வீரர் ரம்யா ஸ்ரீகாந்தனுக்கும் கொடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, கருணைக்கான விருது தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ரேணுகா ராமகிருஷ்ணனுக்கும், இளம் விஞ்ஞானி விருது திருவண்ணாமலையை சேர்ந்த 12 வயது சிறுமி வினிஷா உமாசங்கருக்கும் வழங்கப்பட்டது.
இதுதவிர தமிழகத்தின் முதல் பெண் 108 ஆம்புலன்ஸ் டிரைவர் வீரலட்சுமி, இடுகாடுகளில் வெட்டியாள் வேலைசெய்யும் கோவையை சேர்ந்த வைரமணி, பிரபல வீணை இசைக்கலைஞர் புண்யா ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டோருக்கும் சாதனை பெண்கள் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு கொரோனா காலங்களில் அயராது மக்கள் சேவை பணியாற்றிய முன்கள பெண் பணியாளர்களாகிய டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோரையும் கவுரவித்தனர்.
அந்தவகையில், டாக்டர் விஜயா (அரசு குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குனர்), டாக்டர் ஷீலா சத்யகுமார் (சுகம் மருத்துவமனையின் இயக்குனர்), அருணா தேவி (லேப் டெக்னீசியன்), லட்சுமி (செவிலியர்), சுப்புலட்சுமி (போலீஸ் இணை கமிஷனர்), ராஜேஸ்வரி (இன்ஸ்பெக்டர்), தூய்மை பணியாளர்கள் லதா, வேளாங்கண்ணி, சமூக செயல்பாட்டாளர்கள் சோனியா, இந்திரா சுந்தரம் ஆகிய 10 பேர் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து ரெயின்ட்ராப்ஸ் அமைப்பின் நிறுவனத் தலைவர் அரவிந்த் ஜெயபால் கூறுகையில், கடந்த 7 ஆண்டுகளாக இந்த சாதனை பெண்கள் விருது வழங்கும் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறோம். 8-வது ஆண்டாக தற்போது நடைபெறும் இந்த விழாவில், 15 பேருக்கு விருதுகளை வழங்கியும், முன்களப்பணியாளர்கள் 10 பேரை கவுரவப்படுத்தியும் இருக்கிறோம். விருது பெறும் பெண்களின் வாழ்க்கை முறைகள் நமக்கு உத்வேகத்தை கொடுக்கும். பெண்களை கொண்டாட வேண்டும், அவர்களின் பெருமைகளை வெளி உலகுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. பெண்களால் முடியாத காரியம் எதுவும் இல்லை. எல்லா துறைகளிலும் அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்றார்.