

சென்னை,
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை தொடர்ச்சியாக பலர் பாலியல் வன் கொடுமை செய்து உள்ளனர்.
இதுகுறித்து அயனா வரம் மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த சிறுமியின் தாயார் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
அப்போது, அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர்கள், காவலாளிகள், தோட்டக் காரர்கள், வீட்டு வேலை செய்தவர்களே இந்த கொடுமையை செய்து இருப்பது தெரியவந்தது. அந்த குடியிருப்பில் லிப்ட் ஆபரேட்டராக வேலை செய்த ரவிக்குமார் (வயது 56) என்பவர்தான் அந்த சிறுமியை முதலில் மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். அதன்பிறகு ஒவ்வொருவராக சிறுமியை பாலியல் கொடுமை செய்து உள்ளனர்.
இதையடுத்து, பாலியல் கொடுமை செய்த லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமார் (56), பிளம்பர் சுரேஷ் (32), வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் (48), காவலாளிகள் எரால்பிராஸ் (58), அபிஷேக் (28), சுகுமாரன் (60), முருகேசன் (54), லிப்ட் ஆபரேட்டர் பரமசிவம் (60), பிளம்பர் ஜெய்கணேஷ் (23), லிப்ட் ஆபரேட்டர் பாபு (36), காவலாளி பழனி (40), லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன் (50), பிளம்பர்கள் ராஜா (32), சூர்யா (23), தோட்டப்பணியாளர் குணசேகரன் (55), வீட்டு வேலைக்காரர் ஜெயராமன் (26), எலெக்ட்ரீசியன் உமாபதி (42) ஆகிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 17 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இருந்தபோதிலும், சில காரணங்களுக்காக அவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. பலமுறை ஜாமீன் கோரி அவர்கள் மனு தாக்கல் செய்த போதும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
அதேவேளையில், இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த வழக்கில் ஆஜராக அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீலாக ரமேஷ் நியமிக்கப்பட்டார். நீதிபதி மஞ்சுளா வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் கடைசி வரை ஜாமீனில் விடுவிக்கப்படாததால் அவர்கள் சிறையில் இருந்தபடியே வழக்கு விசாரணைக்கு ஆஜராகி வந்தனர்.
விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லிப்ட் ஆபரேட்டர் பாபு உடல்நல குறைவு காரணமாக இறந்து போனார். இதைத்தொடர்ந்து மீதமுள்ள 16 பேருக்கு எதிராக நடந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் 36 சாட்சிகளும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர். 120 சான்று ஆவணங் கள் சமர்ப்பிக்கப்பட்டன.
அனைத்து தரப்பு விவாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் 15 பேர் குற்றவாளிகள் என கடந்த 1-ந் தேதி நீதிபதி மஞ்சுளா அறிவித்தார். மேலும், இந்த வழக்கில் தோட்ட பணியாளர் குணசேகரன் (55) என்பவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மீதமுள்ள 15 பேருக்கான தண்டனை விவரம் 3-ந் தேதி (அதாவது நேற்று) அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 15 பேரும் புழல் சிறையில் இருந்து நேற்று மதியம் 2.30 மணிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். சிறப்பு கோர்ட்டை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீஸ் பாதுகாப்புடன் 15 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோர்ட்டு அறைக்குள் அரசு தரப்பு வக்கீல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு வக்கீல்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. கோர்ட்டு அறை மூடப்பட்டது.
அதன்பிறகு நீதிபதி மஞ்சுளா, தீர்ப்பை வாசிக்க தொடங்கினார். தீர்ப்பில் நீதிபதி கூறி இருப்பதாவது:-
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான லிப்ட் ஆபரேட்டர் ரவிக்குமாருக்கு, பாலியல் குற்றங்களில் இருந்து சிறுவர்களை பாதுகாக்கும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதுதவிர போக்சோ சட்டத்தின் வேறொரு பிரிவின் கீழ் 7 ஆண்டு சிறை தண்டனையும், கொலை மிரட்டல் குற்றச்சாட்டுக்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
இதேபோல் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் குற்ற வாளிகள் சுரேஷ், அபிஷேக், பழனி, ராஜசேகர் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.
ரவிக்குமார், சுரேஷ், அபிஷேக், பழனி ஆகிய 4 பேரும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். (சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும்)
போக்சோ சட்டத்தின் வெவ்வேறு பிரிவின் கீழ் காவலாளி எரால்பிராசுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், மற்ற 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.6 லட்சம் வழங்க வேண்டும். இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக உடனடியாக சிறுமியின் பெற்றோரிடம் தமிழக அரசு வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, 15 பேரும் மீண்டும் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.