

சென்னை,
சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகை தேவையால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில், குறிப்பாக மல்லிகை பூ கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை எகிறி விற்பனையாகிறது.
தமிழகம் முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை பண்டிகை நாளை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. பண்டிகை நாளான இன்று காலை முதலே ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் குவிந்ததால், சந்தை வளாகமே திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் பூக்களின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், அதன் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, வாசனை மலரான மல்லிகை பூவின் விலை கிலோ 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை எகிறிப் போய் விற்பனையாகிறது.
மல்லிகை மட்டுமின்றி மற்ற பூக்களின் விலையும் உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூக்களின்விலை விவரம் வருமாறு:-
• மல்லிகைப் பூ: ரூ.1,500 –ரூ.2,000 (ஒரு கிலோ)
• ஜாதி மல்லி:ரூ.1,000 (ஒரு கிலோ)
• பன்னீர் ரோஜா:ரூ.150 – ரூ.200 (ஒரு கிலோ)
இதேபோல் சாமந்தி, அரளி உள்ளிட்ட பூஜைக்கான மற்ற மலர்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. விலை அதிகமாக இருந்தாலும், பண்டிகையை விமரிசையாகக் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று பூக்களை போட்டி போட்டு வாங்கிச் செல்கின்றனர்.