

சென்னை,
தமிழகத்தில் உள்கட்டமைப்பு, நகரமயமாக்கல் பணிகளுக்கான கருங்கல் மற்றும் ஜல்லிக்கற்கள் போன்ற கட்டுமான பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும். செயற்கை விலையேற்றத்தை தடுக்கவும் தமிழ்நாடு சட்ட விரோத கனிமச்சுரங்கம், கனிம போக்குவரத்து மற்றும் சேமிப்பு, தடுப்பு விதிகளில் கடந்த ஜூலை 9-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.
இதன் அடிப்படையில், காரைக்கால், புதுச்சேரி தவிர பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லிக்கற்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், விதிகளை செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை ஐகோர்ட்டில் மது பிரேமநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி தர்மாதிகாரி, நீதிபதி அருள் முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள திருத்த விதிகளுக்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெற வேண்டும். உரிய உரிமம் பெற்று எடுக்கப்பட்ட கனிமங்கள் எங்களுக்கு சொந்தமானது. அவற்றை எங்கு விற்க வேண்டும் என் பதை முடிவெடுக்க உரிமம் பெற்றவர்களுக்கு உரிமை உள்ளது.
அதனால், வெளிமாநிலங்களுக்கு கற்களை கொண்டு செல்ல தடை விதித்த அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். தடை விதிக்கவேண்டும்" என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.