

ஈரோட்டில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களுக்கு நிரப்ப கொண்டு சென்ற ரூ.12 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஏ.டி.எம்.
ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிபாளையத்தில் இருந்து ஈரோடு நோக்கி ஏ.டி.எம். எந்திரங்களில் பணம் நிரப்புவதற்காக செல்லும் வாகனம் வந்தது. அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினார்கள். விசாரணையில், அந்த வாகனத்தில் வந்த நந்தகுமார் என்பவர் ஏ.டி.எம். எந்திரங்களில் நிரப்புவதற்காக பணம் கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தார். ஆனால் அந்த பணம் எங்கிருந்து எடுக்கப்பட்டு, எங்கு கொண்டு செல்லப்படுகிறது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இதைத்தொடர்ந்து அந்த வாகனத்தில் இருந்த ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்தை அதிகாகள் பறிமுதல் செய்தனர்.
அரிசி வியாபாரி
இதேபோல் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஈரோட்டை சேர்ந்த அரிசி வியாபாரியான முருகேசன் என்பதும், அவரிடம் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.69 ஆயிரத்து 900 இருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ரூ.62,600 பறிமுதல்
செங்கோடம்பள்ளம் பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அதிகாரிகள் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக காய்கறி பாரம் ஏற்றிக்கொண்டு வந்த ஒரு சரக்கு வேனை நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது செங்கோடம்பள்ளம் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற வியாபாரியிடம் இருந்து உரிய ஆவணம் இல்லாமல் ரூ.62 ஆயிரத்து 600 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த தொகையை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். இந்த தொகை கருவூல அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணத்தை சமர்ப்பித்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஈரோட்டில் நேற்று உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.13லட்சத்து 82 ஆயிரத்து 500 பறிமுதல் செய்யப்பட்டது.