ரெயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை

கோப்புப்படம்
பாளையங்கோட்டையில் ரெயில்முன் பாய்ந்து வங்கி அதிகாரி தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை பாளையங்கோட்டை டி.வி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சிவசங்கர் (40 வயது). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் 3 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி, சிவசங்கர் குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வந்தார்.
நேற்று மதியம் அவர் தனது வீட்டின் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கு சென்றார். அப்போது அந்த வழியாக வாஞ்சி மணியாச்சியில் இருந்து நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு பயணிகள் ரெயில் சென்று கொண்டிருந்தது.
அந்த ரெயில்முன் சிவசங்கர் திடீரென்று பாய்ந்தார். அவர் மீது ரெயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவசங்கர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், மன அழுத்த பிரச்சினையால் சிவசங்கர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






