21 இளம் வக்கீல்களின் பதிவு தற்காலிகமாக ரத்து: பார் கவுன்சில் அதிரடி நடவடிக்கை

மீதமுள்ள வக்கீல்கள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
பார் கவுன்சில்
Published on: 

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் கடந்த 11-ந் தேதி நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் பதிவின் போது, சுமார் 4,500-க்கும் மேற்பட்ட இளம் வக்கீல்கள் பதவியேற்றனர்.

நிகழ்ச்சி முடிந்ததும், புதிய வக்கீல்களின் உறவினர்கள், நண்பர்கள் என்.எஸ்.சி.போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு வெடித்தும், கட்-அவுட்கள் வைத்தும், வாள் பரிசளித்தும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் கடும் இடையூறு ஏற்படுத்தினர்.

பார் கவுன்சில்

இவ்வாறு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இளம் வக்கீல்கள் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் செஞ்சி கதிரவன், துணைத்தலைவர் இ.பாலமுருகன், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் பி.எஸ்.அமல்ராஜ் உள்ளிட்ட பார் கவுன்சில் நிர்வாகிகள் கூட்டாக பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள், "கடந்த 11-ந் தேதி வக்கீல் பதிவு நிகழ்வின்போது போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக செயல்பட்ட 21 இளம் வக்கீல்களை அடையாளம் கண்டு, அவர்களது வக்கீல் பதிவை தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். மீதமுள்ள வக்கீல்கள் மீது நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.

இதேபோல அல்லிக்குளம் கோர்ட்டு வளாகத்தில் வக்கீல்களுடன் மோதலில் ஈடுபட்ட வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 4 வக்கீல்களுக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப் பட்ட வக்கீல்கள் பி.எம்.பாசில், பி.வில்லியம்ஸ் ஆகியோரது வக்கீல் பதிவு நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது” என்று கூறினர்.

X