‘கை’யால் நெரிபட்டு மரணித்தது அடிப்படை நாகரீகம் - காங்கிரஸ் மீது ஆ.ராசா கடும் விமர்சனம்

தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
‘கை’யால் நெரிபட்டு மரணித்தது அடிப்படை நாகரீகம் - காங்கிரஸ் மீது ஆ.ராசா கடும் விமர்சனம்
Published on

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தொடர்ந்து, தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில் த.வெ.க. 108 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைக்க முழு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து, கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக பொறுப்பு கவர்னர் அர்லேகரை சந்தித்த த.வெ.க. தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்த நிலையில், த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் கட்சியை தி.மு.க. எம்.பி. ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரம் காயாத ‘கை’யால் நெரிபட்டு மரணித்தது அரசியல் நெறி மட்டுமல்ல; அவசியமான அடிப்படை நாகரீகமும் தான்! வாழ்க ஜனநாயகம்!!” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com