கோவில் சாலையில் உலா வந்த கரடி: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்


கோவில் சாலையில் உலா வந்த கரடி: பக்தர்கள் அலறியடித்து ஓட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2025 5:39 AM IST (Updated: 10 Oct 2025 5:40 AM IST)
t-max-icont-min-icon

பாபநாசம் கோவில் சாலையில் நேற்று முன்தினம் இரவில் உலா வந்த கரடியால் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார கிராமங்களான அனவன்குடியிருப்பு, பசுக்கிடைவிளை, பொதிகையடி, மேட்டு தங்கம்மன் கோவில் தெரு உள்பட சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர்ந்து கரடிகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

அவை சாலைகளில் ஒய்யாரமாக நடந்து செல்வது, கோவிலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது என நாளுக்கு நாள் பொதுமக்கள் கண்முன்னே அடிக்கடி நடமாடி வருகின்றன.

நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் பாபநாசம் கோவில் பின்புறம் உள்ள சாலையை கரடி ஒன்று கடந்து சென்றது. அப்போது அந்த வழியாக கார், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் அந்த வழியாக நடந்து சென்ற பக்தர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்து ஓடிய கரடியை கண்டு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். ஆனாலும் கரடி எவ்வித அச்சமும் இன்றி கார் நிறுத்த பகுதியின் உள்ளே சென்றது.

இந்த காட்சியை பலரும் செல்போனில் வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் கரடி சாதாரணமாக சாலையை கடந்து சென்ற சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது.

விக்கிரமசிங்கபுரம், பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதால் பொதுமக்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கரடிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story