கோத்தகிரி அருகே குட்டிகளை முதுகில் சுமந்தவாறு கரடி உலா - பொதுமக்கள் அச்சம்

கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோத்தகிரி அருகே குட்டிகளை முதுகில் சுமந்தவாறு கரடி உலா - பொதுமக்கள் அச்சம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் கரடிகள் நடமாட்டம் உள்ளது. ஏற்கனவே இந்த பகுதியில் வனத்துறையினர் 2 முறை கூண்டு வைத்து. அதில் சிக்கிய கரடிகளை தலைகுந்தா பகுதிக்கு கொண்டு சென்று அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக கரடிகள் கன்னிகா தேவி காலனி குடியிருப்பு பகுதிகள் மற்றும் நகராட்சி வளம் மீட்பு பூங்கா பகுதியில் உலா வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பகலில் கன்னிகா தேவி காலனி குடியிருப்பு பகுதியில் தேயிலை தோட்டத்தை ஒட்டி செல்லும் நடைபாதை வழியாக கரடி ஒன்று முதுகில் 2 குட்டிகளை சுமந்தவாறு நடந்து வந்தது.

இதனால் அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து பொதுமக்கள் சத்தம் போட்டு கரடியை விரட்ட முயற்சித்தனர். அவர்களை பார்த்த கரடி சற்று நேரம் தனது குட்டிகளுடன் நடைபாதையிலேயே அமர்ந்து கொண்டது. பின்னர் கரடி தனது குட்டிகளை மீண்டும் தனது முதுகில் சுமந்தவாறு வந்த வழியாகவே திரும்பி சென்று, அருகிலுள்ள தேயிலை தோட்டத்தில் புகுந்து மறைந்தது.

கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். எனவே, குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com