தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது

உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு நியமித்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் தொடர்பாக, தமிழக சட்டசபையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார்.
தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் மசோதா: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது.
Published on

சென்னை,

உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதா, சட்டசபையில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகிறது.

27 மாவட்ட பிரதிநிதிகள் பதவிக்காலம் முடிவு

தமிழ்நாட்டில் உள்ள காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்கள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத சென்னையை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களிலும் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த 27 மாவட்டங்களிலும் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவிக்காலம் கடந்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த உள்ளாட்சிகளின் நிர்வாகங்களை கவனிக்க தமிழக அரசு தனி அலுவலர்களை நியமித்தது.

சட்ட மசோதா தாக்கல்

இந்த தனி அலுவலர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 3-ந்தேதி முடிவடைந்தது. இந்த நிலையில், மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும், இதேபோல் நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று தமிழக சட்டசபையில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் என்.ஆனந்த் சட்ட மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அக்டோபர் 19-ந்தேதி வரை..

காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி தவிர 28 மாவட்டங்களில் உள்ள, கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம், கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி 5-ந்தேதி முடிவடைந்தது. வார்டு எல்லை மறுவரையறை, இடஒதுக்கீடு பணிகள் நிறைவு பெறாததால், தேர்தல் நடத்தப்படவில்லை.

எனவே, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போது வரை, மறுவரையறை பணிகள் முடியவில்லை. எனவே, தனி அலுவலர்களின் பதவி காலத்தை வரும் அக்டோபர் 19-ந்தேதி வரையிலோ, தேர்தலுக்கு பின், உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் வரையிலோ நீட்டிக்க, ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com