திமுகவை பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது - மாணிக்கம் தாகூர்

அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு திமுகதான் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
மாணிக்கம் தாகூர்
கோப்புப்படம்
Published on: 

சென்னை,

கூட்டணி என்ற வலையை விரித்து, திமுகவையும் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏக்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது 'மிகச்சிறந்த' வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு சென்றவர் நயினார் நாகேந்திரன். கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியைக்கூட தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர். இன்று மேடைக்கு மேடை ‘நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்" என்று வெற்றுக்கூச்சல் போடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை.

2014-ல் பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே கைவிட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் நயினார், தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறைய தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்! அதற்கான ஆதாரங்கள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை நாட்டுமக்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். மராட்டியத்தில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசில் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான்.

இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, 'சந்திரமுகி' திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரென சந்திரமுகியாக உருமாறி, ‘இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்' என்று ஆக்ரோஷம் காட்டுவதைப்போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பா.ஜ.க. நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது.

அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்.பி.க்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித்ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கறுஞ்சட்டை அணிந்து கருப்புக் கொடி ஏற்றியபோது, ‘டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம்” என்று சொன்னவர்கள், இன்று பாஜக விரித்த வலையில் விழாமல் இருப்பார்களா?

அன்று ‘இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார். அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், ‘நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதல்-அமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்க பாஜக காய்நகர்த்தி வருகிறது.

'தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது' என்பார்களே, அது நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, 'ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது' என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாததுபோல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், ‘திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா?

முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டுபோய் மக்கள் நிறுத்தியிருக்கிறார்கள். கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள். நூற்றாண்டு கால வரலாறு கொண்ட காங்கிரஸ் ஒரு பேரியக்கம். அதை யாராலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது என்ற உண்மையைப் பிரதமர் மோடியே உணர்ந்து அந்தப் பேச்சைக் கைவிட்ட பிறகும், நீங்கள் இன்னும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பதுதான் பரிதாபம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X