

டெல்லி,
கரூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை. கர்நாடகாவில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய இவர் 2019-ம் ஆண்டு ஐ.பி.எஸ். பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், பா.ஜ.க.வில் இணைந்த அண்ணாமலை 2021 முதல் 2025 வரை தமிழக பா.ஜ.க. தலைவராக செயல்பட்டார்.
அதேவேளை, தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் பா.ஜ.க. கூட்டணி அமைந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது அ.தி.மு.க.வுக்கும், அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர், அண்ணாமலைக்கு பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்புகள் எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார்.
இதையடுத்து, பா.ஜ.க.வில் இருந்து அண்ணாமலை விலகி புதிய கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். அவர் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் நிதின் நபின், உள்துறை மந்திரி அமித்ஷா, பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோரை தனித்தனியே சந்தித்தார். பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை சந்தித்த அண்ணாமலை தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.
5 பக்கம் கொண்ட அந்த ராஜினாமா கடிதத்தில், தமிழக பா.ஜ.க.வில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், கட்சியின் தவறான முடிவுகள், அ.தி.மு.க.வுடன் கூட்டணியை நீடித்தது போன்ற காரணங்களால் நாடாளுமன்ற தேர்தலில் 11 சதவீதமாக இருந்த பா.ஜ.க. வாக்கு சதவீதம் 2026 சட்டசபை தேர்தலில் 3 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பா.ஜ.க.வில் நிலவி வரும் உட்கட்சி பூசல் உள்பட பல்வேறு குற்றச்சாடுகளையும் அண்ணாமலை அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை, அண்ணாமலையின் ராஜினாமா கடிதத்தை பாஜக தலைமை ஏற்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாமலை தெரிவித்த குற்றச்சாடுகள் குறித்து விசாரிக்க தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை பாஜக தலைமை அழைத்துள்ளது. இதையடுத்து, நயினார் நாகேந்திரன் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவரிடம் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜக தலைமை விசாரணை நடத்த உள்ளது. அதே சமயம் ராஜினாமா செய்வது என்ற நிலைப்பாட்டில் அண்ணாமலை உறுதியாக உள்ள நிலையில் அவரசப்பட்டு ராஜினாமா முடிவை எடுக்க வேண்டாம், சற்று காத்திருங்கள் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியது. மேலும், அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் குறித்து பிரதமர் மோடியிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணாமலையின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தினத்தந்திக்கு கிடைத்த பிரத்யேக தகவலின்படி, அண்ணாமலை புதிய கட்சி தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தை மையப்படுத்தி...
அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சி தமிழகத்தை மையப்படுத்தியதாக அமைய உள்ளது.
மதசார்பின்மை...
தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் மதசார்பின்மை கொள்கையை கொண்டுள்ள நிலையில், அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சியும் மதசார்பின்மை கொள்கையை கடைபிடிக்க உள்ளதாக தெரிகிறது.
இளைஞர்கள்...
தமிழக அரசியல் களத்தில் தற்போது இளைஞர்களின் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில், அண்ணாமலை தொடங்க உள்ள புதிய கட்சி இளைஞர்களை மையப்படுத்தி இயங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
5-ந்தேதி அறிவிப்பு:
நாளை(4-ந்தேதி) அண்ணாமலை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இந்த நிலையில், புதிய கட்சிக்கான அறிவிப்பை நாளை மறுதினம்(5-ந்தேதி) அண்ணாமலை அறிவிக்க உள்ளார்.
இது தொடர்பாக தினத்தந்தி நிருபரிடம் அண்ணாமலை பேசுகையில், “நான் புதிய கட்சி தொடங்க முடிவு செய்துள்ளேன். தமிழகத்தை மையப்படுத்திய, மதசார்பற்ற, இளைஞர்களை மையப்படுத்திய கட்சியாக எனது கட்சி இருக்கும்” என்று கூறியுள்ளார்.