டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்


டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது - திருமாவளவன்
x

கோப்புப்படம்

தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பா.ஜ.க. முன்னிலை வகிக்கிறது.

மதுரை,

டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் புதுடெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல் மந்திரியுமான கெஜ்ரிவால் மற்றும் தற்போதைய முதல் மந்திரி ஆதிஷி , ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களான மனிஷி சிசோடியா, சோம்நாத் பார்தி ஆகியோரும் பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

பா.ஜ.க. தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதனால், டெல்லியில் முதல் முறையாக பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லியில் பா.ஜ.க. முன்னிலை வகிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆம் ஆத்மி இந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமையுமேயானால் அது தேசத்திற்கான ஒரு பின்னடைவாகத்தான் கருத வேண்டி இருக்கிறது. நியாயமான முறையில் டெல்லி தேர்தல் நடைபெற்றிருக்குமா என்ற ஐயத்தை எழுப்புகிறது.

இந்தியா கூட்டணி கட்டுகோப்பாக இல்லை. காங்கிரஸ், ஆம் ஆத்மி ஒற்றுமையாக இந்த தேர்தலை சந்திக்கவில்லை. இந்தியா கூட்டணி தலைவர்கள் இதுகுறித்து கலந்தாய்வு செய்ய வேண்டும். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாறுவதற்கான திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது" என்று திருமாவளவன் தெரிவித்தார்.


Next Story