தூசூர் ஏரியில் படகுசவாரி தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தூசூர் ஏரியில் படகுசவாரி தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
தூசூர் ஏரியில் படகுசவாரி தொடங்கப்படுமா ? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
Published on

எருமப்பட்டி:

நாமக்கல் அருகே உள்ள தூசூர் ஏரியில் படகுசவாரி தொடங்க வேண்டும் என சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூசூர் ஏரி

நாமக்கல் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 79 ஏரிகள் உள்ளன. இந்த ஆண்டு பெய்த தொடர் மழைக்கு இவற்றில் 32 ஏரிகள் நிரம்பி உள்ளன. குறிப்பாக மாவட்டத்திலேயே பெரிய ஏரியான தூசூர் ஏரி இந்த ஆண்டு 2-வது முறையாக நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கிறது.

இந்த ஏரி சுமார் 120 ஏக்கர் பரப்பளவு கெண்டது ஆகும். இதன் மூலம் 750 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது நாமக்கல்- துறையூர் பிரதான சாலையில் சுமார் 3 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஏரி நிரம்பிய தகவல் கிடைத்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுற்றுலா தலம் போல பார்வையிட வருவார்கள். அப்போது கடைமடை வழியாக செல்லும் தண்ணீரில் சிறுவர், சிறுமிகள் துள்ளி குதித்து ஆட்டம் போடுவதையும் பார்க்கலாம்.

படகுசவாரி

பாசன பரப்பு அதிகமாக இருந்தாலும் தற்போது விவசாயம் செய்யும் பகுதி குறைவாகவே காணப்படுகிறது. இதனால் குறைந்தது 6 மாத காலத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சம் எதுவும் இல்லை என்பதால் மாவட்ட நிர்வாகம் இந்த ஏரியில் சிறிய அளவிலான பூங்கா ஒன்றை ஏற்படுத்தி படகுசவாரிக்கு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் ஏரியின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

உரிய நடவடிக்கை

இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அலங்காநத்தம் பாலப்பட்டியை சேர்ந்த வினோத் விஜயகுமார்:- தூசூர் ஏரியை சுற்றிலும் அதிக அளவில் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் பொழுதுபோக்கிற்காக நாமக்கல்லில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு வந்து செல்வார்கள். ஆனால் தற்போது வீடுகளிலேயே சினிமா படங்களை பார்க்கும் வசதி வந்து விட்டதால் அங்கு செல்வதும் குறைந்து விட்டது. இதனால் விடுமுறை நாட்களில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து கொண்டு இருப்பதை பார்க்க முடிகிறது.

தூசூர் ஏரி நாமக்கல் - துறையூர் பிரதான சாலையின் ஓரத்தில் அமைந்து இருப்பதால், இங்கு படகுசவாரி தொடங்கினால் இப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு தேவைகளை பூர்த்தி செய்வதாக இருக்கும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்த கட்டணம்

தனியார் கல்லூரி பேராசிரியர் பாலுசாமி:- விடுமுறை நாட்களில் தற்போதைய இளைய தலைமுறையினர் பெரும்பாலும் செல்போனில் தான் நேரத்தை செலவிடுகிறார்கள். இது அவர்களின் கண்களை பெரிய அளவில் பாதிக்கும் என்பதை யாரும் உணருவது இல்லை. இந்த நிலையை மாற்ற தூசூர் ஏரி கரையையொட்டி விளையாட்டு உபகரணங்களுடன் பூங்கா அமைக்க வேண்டும். மேலும் தூசூர் ஏரியிலும் படகுசவாரிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதனை சுற்றி கிராமங்கள் அதிகளவில் இருப்பதால் குறைந்த கட்டணத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

நாமக்கல் நகரிலும் கூட பொழுதுபோக்கு அம்சமாக சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. எனவே அங்குள்ள சிறுவர், சிறுமிகளும் இங்கு படகுசவாரி தொடங்கினால் நிச்சயம் பயன்பெறுவார்கள். இதேபோல் ஏரியில் பாதி அளவுக்கு மேல் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. அதனை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com