

திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக வந்திருந்த சிறப்புக் காவலர், தங்கியிருந்த பள்ளியின் கழிவறைக்குள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் சென்னை ஆவடி 13-ம் அணி சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் திருவண்ணாமலை அருகே உள்ள மங்கலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தங்கியிருந்து பணியாற்றி வந்தனர்.
தீபத் திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று (வியாழக்கிழமை) காலை காவலர்கள் அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்புக் காவலர் வடிவழகன் என்பவர் பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக காவலர்கள், கழிவறைக் கதவை தட்டிப் பார்த்துள்ளனர். உள்ளே இருந்து எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, வடிவழகன் மயங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக மங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வடிவழகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.