

சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கு. ஜெகதீஸ்வரி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மற்றும் குழந்தைகள் மையத்தின் செயல்பாடுகளை இன்று (04.06.2026) நேரில் பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், அண்ணாநகர் மண்டலம், வார்டு-101, அமைந்தகரையில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் செனாய் நகர், சுப்பராயன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கு முதல் நாளாக வருகை தந்த பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர், மாணவர்களுடன் கலந்துரையாடி, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து, மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கினார். காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவு வகைகளை தரமாகவும், சுவையாகவும், சுத்தமாகவும் மாணவர்களுக்கு வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களின் தரம், எடை ஆகியவற்றை ஆய்வு செய்து, இருப்பு பதிவேடுகளை ஒப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, அமைச்சர் அமைந்தகரை-சென்னை நடுநிலைப்பள்ளி மற்றும் சுப்பராயன் தெரு-சென்னை மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான பாடப்புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, அமைச்சர் அமைந்தகரையில் உள்ள குழந்தைகள் மையத்தின் செயல்பாட்டினைப் பார்வையிட்டு, குழந்தைகளின் வருகை, குழந்தைகளின் எடை, உயரம் கணக்கீடு செய்யும் பணியினை ஆய்வு செய்து, மாணவர்களுக்கு அரசு வழங்கும் ஊட்டச்சத்து உணவுகளை தவறாமல் வழங்கிடவும், குழந்தைகள் நல மையத்தினைத் தூய்மையாகப் பராமரித்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுகளின்போது, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசுச் செயலாளர் எம். மரியம் பல்லவி பல்தேவ், இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம்) ஐ.எஸ்.மெர்சி ரம்யா மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.