நெல்லையில் பட்டப்பகலில் அண்ணன்-தம்பி குத்திக்கொலை: சென்னை தொழிலாளி வெறிச்செயல்

நெல்லை டவுன் அருகே மணிப்புரம் பகுதியில் காரை நிறுத்துவது தொடர்பாக டால்டனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இரட்டைக்கொலை நடந்த இடத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் சஞ்சய் தேஷ்முக் விசாரணை நடத்தினார். கொலையான டால்டன்.
Published on: 

நெல்லை,

நெல்லை டவுன் அருகே பட்டப்பகலில் அண்ணன்-தம்பி என 2 பேரை சென்னையைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை டவுன் மணிப்புரம் பகுதியை சேர்ந்தவர் டால்டன் (வயது 76). இவருக்கு நிக்கோலஸ் ராஜரத்தினம்(78) உள்பட 3 சகோதரர்கள் உள்ளனர்.

பெட்ரோல் பங்க் உரிமையாளர்

இவர்கள் அனைவருமே குவைத்தில் வேலைபார்த்துவிட்டு தற்போது சொந்த ஊர் திரும்பியவர்கள் ஆவர். இவர்கள் 4 பேருமே மணிப்புரம் பகுதியில் ஒரே காம்பவுண்டுக்குள் தனித்தனியே வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். டால்டன் அப்பகுதியில் பெட்ரோல்பங்க் நடத்தி வருகிறார். இவரது வீட்டின் அருகே மணிப்புரத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான குடும்ப கோவில் உள்ளது. அந்த கோவில் அருகே உள்ள இடத்தில் காரை நிறுத்துவது தொடர்பாக டால்டனுக்கும், செந்தில்குமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

கைகலப்பு

செந்தில்குமார் சென்னையில் வெல்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ரஞ்சிதா என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இந்த நிலையில் செந்தில்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இன்று காலை கோவில் அருகே காரை நிறுத்துவது தொடர்பாக செந்தில்குமாருக்கும், டால்டனின் மகன் நரேனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

சரமாரி கத்திக்குத்து

இதை பார்த்த நரேனின் பெரியப்பா நிக்கோலஸ் ராஜரத்தினம் தகராறை விலக்கி விடுவதற்காக சென்றுள்ளார். அப்போது செந்தில்குமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நிக்கோலஸ் ராஜரத்தினத்தை சரமாரியாக குத்தினார். இதில் அவர் அலறிதுடித்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்து விழுந்தார். அவரது சத்தம் கேட்டு டால்டன் அங்கு ஓடி சென்றார். அப்போது ஆத்திரம் தீராத செந்தில்குமார் டால்டனையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த டால்டனின் மகன் நரேன், செந்தில்குமாரை தடுக்க முயன்றார். இதில் அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. மேலும் டால்டனை குத்தியபோது செந்தில்குமாரின் கைகளிலும் கத்திக்குத்து ஏற்பட்டுள்ளது.

இரட்டைக்கொலை

இதற்கிடையே அப்பகுதி மக்கள் இதைப்பார்த்து போலீசில் புகார் செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு டவுன் போலீசார் விரைந்து சென்று ரத்த வெள்ளத்தில் கிடந்த டால்டன் மற்றும் நிக்கோலஸ் ராஜரத்தினம் ஆகியோரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். டால்டன் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே டால்டன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் நிக்கோலஸ் ராஜரத்தினம் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே நிக்கோலஸ் ராஜரத்தினம் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதற்கிடையே காயமடைந்த நரேன், கொலையாளி செந்தில்குமார் ஆகியோரும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நெல்லை போலீஸ் கமிஷனர் விசாரணை

இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்ததும் சம்ப இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சேகர் சஞ்சய் தேஷ்முக், நெல்லை மாநகர கிழக்கு போலீஸ் துணை கமிஷனர் சரவணன், இன்ஸ்பெக்டர் செந்தில் தங்கதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கார் நிறுத்தும் தகராறில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த இரட்டைக்கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை சேகரித்தும் விசாரணை நடந்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com