திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி

திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்- தம்பி பலியாகினர்.
திட்டக்குடி அருகே ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலி
Published on

திட்டக்குடி, 

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த எரப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல் (வயது 40), லாரி டிரைவர். இவருக்கு நித்திஷ் (12), சூர்யா (8) என்ற 2 மகன்கள் இருந்தனர். இதில் நித்திஷ் அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பும், சூர்யா 4-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

வழக்கம்போல் நேற்று காலை அண்ணன்- தம்பி இருவரும் பள்ளிக்கு சென்றனர். பின்னர் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் இருவரும் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள புது ஏரிக்கு சென்றுள்ளனர்.

2 பேர் பலி

அப்போது சூர்யா எதிர்பாராதவிதமாக ஏரியில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தான். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நித்திஷ், தனக்கு நீச்சல் தெரியாவிட்டாலும், எப்படியாவது தனது தம்பியை காப்பாற்றி விட வேண்டும் என்ற எண்ணத்தில் ஏரியில் இறங்கினார்.

இதில் தண்ணீரில் தத்தளித்த இருவரும் ஒருவன் பின் ஒருவராக மூழ்கினர். இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் நித்திஷ், சூர்யா ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே நித்திஷ், சூர்யா ஆகியோர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சோகத்தில் மூழ்கிய கிராமம்

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆவினங்குடி போலீசார், பலியான 2 சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் மூழ்கி அண்ணன்-தம்பி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com