தமிழகத்தில் விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயரும் - எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் விரைவில் பேருந்துக் கட்டணம், மின் கட்டணமும் உயரும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் பஸ் கட்டணம், மின் கட்டணம் உயரும் - எடப்பாடி பழனிசாமி
Published on

சேலம்,

சேலத்தில் உள்ள மெய்யனூரில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களுக்கு வாழ்வளிக்கும் திட்டம் எதுவுமே நடைபெறவில்லை. கொரோனா காலத்தால் மக்களுக்கு தற்போது சோதனையான நேரம். இந்த நேரத்தில் சொத்து வரி உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. இது உண்மையிலேயே மக்களுக்கு செய்யப்படும் துரோகம்.

சட்டமன்ற தேர்தலில்ன் போது திமுக சார்பில் 500க்கு மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்தனர். அதில் ஒன்றிரண்டை மட்டும் நிறைவேற்றி உள்ளனர். தி.மு.க. 70 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக பொய்யாக செய்தியை பரப்பி வருகின்றனர்.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தது அ.தி.மு.க. அரசு. முதல்வர் ஸ்டாலினே நினைத்தாலும் வேளாண்மைக்கு எதிரான எந்த தொழிலையும் அனுமதிக்க முடியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மத்திய அரசின் துணையோடு விவசாயிகளின் நலனை பாதுகாத்த அரசு அதிமுக அரசு.

நிதிப்பற்றாக்குறை வரும்போது, அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர், நிச்சயமாக அதனை உயர்த்துவார்கள். ஏற்கெனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் பஸ் கட்டணம் உயரும், மின் கட்டணமும் உயர்த்தப்படும். காரணம் அதுவும் பெரும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதோடு பால் விலையையும் உயர்த்தப்போகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com