பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

பள்ளி தொடங்கும், முடியும் நேரங்களில் பஸ்களை சரியாக இயக்குவதை கண்காணிக்க அமைச்சர் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு பஸ் பாஸ்: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு
Published on

சென்னை,

போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வருகிற (ஜூன்) 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டும், அதன் பின்னர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவை திறக்கப்பட உள்ளதை முன்னிட்டும், 2025-26 கல்வியாண்டில் மாணவர் / மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பஸ் பயண அட்டை அவர்தம் கல்வி பயிலும் பள்ளி / கல்லூரியிலேயே அவர்களின் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

அதற்குன்டான கால அளவினை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் 2024-25-ம் கல்வி ஆண்டிற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட பயண அட்டை, பள்ளி மாணவ/மாணவியர்கள் சீருடை அல்லது பள்ளிகளில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து தங்கள் இருப்பிடத்திலிருந்து தாம் பயிலும் பள்ளி வரையிலும் சென்று வருவதற்கு, அதே போன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரசு பல் தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலைய மாணவ/மாணவியர்கள் 2024-25 கல்வி ஆண்டில் வழங்கப்பட்ட கட்டணமில்லா பஸ் பயண அட்டை அல்லது தங்களது கல்வி நிறுவனத்தால் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்து கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி துவங்கும்/முடியும் நேரம் வரை பஸ்கள் சரியாக இயங்குவதை கண்காணித்திட அலுவலர்கள் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிய பஸ் நிறுத்தத்தில் பஸ்களை நிறுத்தி மாணவ / மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி, இறக்கி செல்ல அனைத்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நடத்துநர் / ஓட்டுநர்களுக்கும் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com