பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்

பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் - அமைச்சர் ராஜகண்ணப்பன்
Published on

மதுரை,

இம்மாதம் 28 மற்றும் 29-ந்தேதிகளில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சில மத்திய வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த போராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில அங்கீகரிக்கப்படாத சங்கங்களின் உறுப்பினர்கள் பங்கேற்க இருப்பதாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன.

இந்த சூழ்நிலையில், அரசு ஊழியர்கள் யாரும் வேலை நிறுத்த போராட்டத்திலோ அல்லது வேலை நிறுத்தம் செய்வதாக அச்சுறுத்தலோ செய்வது அல்லது ஆர்ப்பாட்டம் போன்ற எதிர்ப்பு செயல்பாடுகளில் பங்கேற்று, அதன் மூலம் அரசு அலுவலகங்களின் இயல்பான செயல்பாட்டை பாதிப்படையச் செய்தால் அது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஒழுங்கு விதிகளை மீறியதாக அமைந்துவிடும்.

எனவே இதுகுறித்து பணியாளர்களுக்கு தகுந்த அறிவுரையை வழங்குங்கள் என்றும் பணியாளர்கள் எவராவது அலுவலகத்திற்கு வராமல் அந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக தெரிய வந்தால், அவர் அலுவலகத்திற்கு வராமலிருந்ததை அங்கீகாரமற்றதாக கருத வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது. .

இந்த சூழலில் அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு வேலை நிறுத்த அறைகூவலை மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் ஏற்று மாநில அரசு ஊழியர்களுடன் இணைந்து வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்தியது. இந்தியா முழுவதும் நடைபெறும் வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், அமைப்பு சாரா நிறுவன பணியாளர்கள் என சுமார் 25 கோடி பேர் பங்கேற்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரமாக நிர்ணயிக்க வேண்டும். தொழிலாளர்களின் வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. இப்போராட்டத்தை முன்னெடுத்து செல்கிறது. இதில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள், அரசு ஊழியர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆட்டோ, சுமை தூக்கும் கூலி தொழிலாளர்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் என சுமார் 2 கோடி பேர் இப்போராட்டத்தில் கலந்து கொள்வதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வேலை நிறுத்தத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பங்கேற்பதால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கக் கூடும் என்பதால் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோ ஒர்க் நோ பே என்ற அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதாகவும் மத்திய, மாநில அரசுகள் எச்சரித்துள்ளன.

வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்களின் அத்தியாவசிய பணிகள் பாதிக்கப்படக்கூடும், குறிப்பாக பொது போக்குவரத்து பாதிக்கும் என்பதால் அதனை தடுக்க போக்குவரத்து துறை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் பஸ்களை இயக்க தமிழக அரசு அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது. பஸ்கள் நிறுத்தப்படுகின்ற பணிமனைகள் முன்பு போலீசாரை நிறுத்தி இயக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர்கள் செய்துள்ளார்கள்.

இந்நிலையில் பொது வேலைநிறுத்தத்தின்போது பஸ்களை வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அரசு போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பு இல்லை. தமிழக போக்குவரத்துதுறை இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் இருந்து அந்தந்த போக்குவரத்து பணிமனைகளுக்கு முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நேரடியாக சில்லரை விற்பனையில் டீசல் கொள்முதல் செய்து நிரப்பப்படுகிறது.

இதனால் தமிழக அரசுக்கு மாதத்துக்கு ரூ.3 கோடி லாபம் ஈட்டப்படுகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அந்தந்த பெட்ரோல் நிலையங்களுக்கு பஸ்கள் சென்று பெட்ரோல் நிரப்பியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இலவச பஸ் பயண சலுகை அறிவிப்புக்கு பிறகு அரசு பஸ்களில் பெண் பயணிகள் வருகை 40 சதவீதம் இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் தற்போது 62 சதவீத பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர். இந்த திட்டம் மூலம் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் வாக்கு அதிகளவு தி.மு.க.விற்கு வாக்களித்துள்ளனர். தற்போதைய நிதிநிலை அறிக்கையில் போக்குவரத்து துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களுக்கு போக்குவரத்து துறை, போலீசார் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. விதிகளை மீறும் மாணவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கிராம புறங்களில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 14 ஆயிரம் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. ஆனால் தற்போது தி.மு.க. ஆட்சியில் 18 ஆயிரத்து 177 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. இதனை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரிக்கின்றனர். இந்த போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கும் அதே நேரத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் போராட்டம் நடக்கும் 2 நாட்களும் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.

இதனிடையே நாளை மறுநாள் தொடங்கும் பொது வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினர் பங்கேற்கவில்லை என்றும் அதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், ஆளும் கட்சி தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.

மாநில அரசும் தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்கவில்லை, சம்பள உயர்வு, ஓய்வூதியம் பெறுவோர் நிலுவை தொகை வழங்காமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாமல் உள்ளன. இதனால் மத்திய அரசை மட்டும் குறை கூறுவது ஏற்க முடியாது. இதன் காரணமாக அனைத்து தொழிற்சங்கங்கள் நடத்தும் வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்காது. அனைத்து தொழிலாளர்களும் பணியில் ஈடுபடுவார்கள்.

பஸ்களை இயக்குவார்கள். அரசு போக்குவரத்து கழகங்களில் 50 முதல் 60 ஆயிரம் போக்குவரத்து தொழிலாளர்கள் அண்ணா தொழிற்சங்கத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரும் பொதுமக்கள் நலன் கருதி தங்கள் பணிகளில் போராட்ட நாட்களில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com