

சென்னை,
தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் ஆளும் த.வெ.க., பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், கம்யூனிஸ்டு கட்சிகள் தனித்தனியாக களம் காண்கின்றன. இதனால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
இடைத்தேர்தலுக்கன வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 3 மணியுடன் மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், பிரதான கட்சிகள், மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 39 வேட்பாளர்கள் மொத்தம் 51 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் என இரு தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 99 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்றது. இதில், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக, திமுக, சிபிஎம், நாதக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மதுராந்தகத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், தி.மு.க. வேட்பாளர் பரந்தாமன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகிராமன், அ.தி.மு.க. வேட்பாளர் கணிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சுகந்தி ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
இதைபோல தாராபுரத்தில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமா, திமுக வேட்பாளர் சுகன்யா, அ.தி.மு.க. வேட்பாளர் பானுமதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் லட்சுமணன் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.