

சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன், தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) நேற்று இணைந்தார். சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு சென்ற அவர், கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் உறுப்பினராக இணைந்துகொண்டார்.
சி. மகேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளராக பணியாற்றியவர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட அவர், அத்தேர்தலில் டெபாசிட் இழந்தார்
தவெகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சி. மகேந்திரன், “இந்தத் தேர்தலில் தவெக சாதியை தோற்கடித்து காட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் மக்களிடையே உருவாக்கியுள்ளார். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் நான் தவெகவில் இணைந்துள்ளேன்.
சாதி தோற்கடிக்கப்பட்டிருப்பதை அரசியலில் வியப்புடன் பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற அனைத்து பாகுபாடுகளையும் தவெகவின் தேர்தல் வெற்றி உடைத்தெறிந்துள்ளது. சிவப்பு துண்டோடு தவெகவில் தொடர்ந்து செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி சாதியை ஒழித்துள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் சி.மகேந்திரன் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியில் மூத்த உறுப்பினராக இருந்து வந்த சி.மகேந்திரன் கட்சி அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பொறுப்பு வகித்தவர். சமீபகாலமாக கட்சியின் அமைப்பு விதிகளுக்கு விரோதமாகவும், கட்சியின் கோட்பாட்டு நெறிமுறைகளுக்கு எதிராகவும் செயல்பட்டதால் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டார்.
குறிப்பாக,கட்சியின் ஆரம்பகால தலைவர்களால் உருவாக்கப்பட்ட, இன்று தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மதிப்புமிக்க பதிப்பகமாக வளர்ந்துள்ள நிறுவனத்தை குறுக்கு வழியில் சிலர் கையகப்படுத்துவதற்கு மோசடியான ஆவணங்களை தயார் செய்திருந்திருந்தனர்.
அத்தகைய மோசடி பேர் வழிகளுக்கு ஆதரவாக சி.மகேந்திரன் செயல்பட்டார். எனவே, சி.மகேந்திரன் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. அவரும் கட்சியுடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தார்.
சி.மகேந்திரன் தனது தவறுகளை கலைந்து கொண்டு கட்சியுடன் தன்னை பொருத்திக் கொள்ள கட்சி கொடுத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் தற்போது அவர், தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்ந்துவிட்டார்.
சி.மகேந்திரனின் இந்த நடவடிக்கையின் மூலம் அவர் மீது கட்சி எடுத்த நடவடிக்கை மிகச் சரியானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரியப்படுத்திக் கொள்கிறது..
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.