

சென்னை,
த.வெ.க. ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் கடந்த மே மாதம் 13-ந்தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை அரசு நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு இருந்தார்.
அதற்கான வாக்கெடுப்பு சட்டசபையில் நடந்தபோது, அ.தி.மு.க.வில் 2 பிரிவாக எம்.எல்.ஏ.க்கள் பிரிந்து வாக்களித்தனர். பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 பேர் ஒரு பிரிவாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தலைமையில் 25 பேர் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தனர். 25 பேர் பிரிவில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி 25 பேரும் த.வெ.க. அரசுக்கு ஆதரவளித்ததால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு, ஆய்வில் இருந்தபோதே 25 பேர் பிரிவில் இருந்த இசக்கி சுப்பையா, சத்தியபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் வெற்றி பெற்றிருந்த 4 சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே அ.தி.மு.க.வுக்குள் மாற்றம் ஏற்பட்டது. ராஜினாமா செய்த 4 பேர் தவிர மீதமுள்ள 21 பேரையும் (சி.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் உள்பட) அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளபடி மன்னித்துவிடலாம் என்று சபாநாயகரிடம் எடப்பாடி பழனிசாமி கடிதம் கொடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு, 21 பேர் மீதான மன்னிப்பும் ஏற்கப்படுவதாகவும், ராஜினாமா செய்துள்ள 4 பேர் மீதும் நடவடிக்கை தொடங்க இருப்பதாகவும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் சமீபத்தில் அறிவித்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்து வந்த சி.விஜயபாஸ்கர் நேற்று பிற்பகலில் தலைமைச்செயலகத்திற்கு வந்தார். அங்கு சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து பேசிய அவர், விராலிமலை எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக தனது கைப்பட எழுதிய கடிதத்தை வழங்கினார். அப்போது சட்டசபை செயலாளர் சாந்தி உடனிருந்தார். தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகுவதாகவும் சி.விஜயபாஸ்கர் அறிக்கை வெளியிட்டார்.
சி.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து விராலிமலை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.