மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புக்காக கேமராக்கள் பொருத்தம்

சிறுமுகை வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது
மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்புக்காக கேமராக்கள் பொருத்தம்
Published on

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பு பணிக்காக 194 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

புலிகள் கணக்கெடுப்பு

கோவை வன கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் காட்டுயானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், செந்நாய், காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் வனவிலங்குகள் வனப்பகுதிக்குள் இடம்பெயர்ந்து செல்வதை வழக்கமாக கொண்டு உள்ளன.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு- 2026 (பேஸ்-3) பணிகளுக்காக மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உத்தரவின் பேரில் 194 தானியங்கி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

சிறுமுகை

மேட்டுப்பாளையம் வனச்சரகம் 9,300 ஹெக்டேர் பரப்பளவில் மேட்டுப்பாளையம், சுண்டப்பட்டி ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 94-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கேமராக்கள் பொருத்தும் பணி

சிறுமுகை வனச்சரகம் 11,000 ஹெக்டேர் பரப்பளவில் பெத்திக்குட்டை, ஒடந்துறை ஆகிய 2 பிரிவுகளில் 6 சுற்றுகளை உள்ளடக்கியது. வனச்சரக அலுவலர் தினேஷ் தலைமையில் வனவர், வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்பட வனப்பணியாளர்கள் 6 குழுக்களாக பிரிந்து 50 இடங்களில் தானியங்கி கேமராக்களை பொருத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு அதில் பதிவான காட்சிகளை வைத்து புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com