

தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், தேசிய வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சுகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் வரும் 23.2.2026 முதல் 28.2.2026 வரை குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் நடைபெறும். இத்திட்டத்தின் கீழ் 6 மாதம் முதல் 60 மாதம் வரை உள்ள சுமார் 1 லட்சத்து 7 ஆயிரத்து 537 குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. குழந்தைகளின் உடல், மன வளர்ச்சி மற்றும் புத்தி கூர்மைக்கு இந்த நுண்சத்து இன்றியமையாதது.
கண் ஆரோக்கியம்: கண் குருடு ஏற்படாமல் தடுக்க இது அவசியம். குடல், சிறுநீர், சுவாசப் பாதைகள் மற்றும் தோல் போன்ற உறுப்புகளைத் தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இந்த திரவத்தால் எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாது.
அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 முதல் 11 மாத குழந்தைகளுக்கு 1 மில்லி, 12 முதல் 60 மாத குழந்தைகளுக்கு 2 மில்லி அளவில் இந்த திரவம் வழங்கப்படும். பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ திரவம் வழங்கிப் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.