

சென்னை,
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய 3 மாநிலங்களில் அடுத்த மாதம் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்காளத்திற்கு அடுத்த மாதம் 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார்.
தேர்தல் தொடர்பாக மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்டார். அதன் விவரம் பின்வருமாறு:-
* 5 மாநிலங்களிலும் மொத்தம் 17.40 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
* மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன
* 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
* 25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
* அசாமில் 128 தொகுதிகள், கேரளாவில் 140 தொகுதிகள், புதுச்சேரியில் 30 தொகுதிகள், தமிழ்நாட்டில் 234 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
* தமிழ்நாட்டில் 234 தொகுதிகளில் மொத்தம் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
* அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்
* ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும்
* வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும்.
* வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர்களின் கலர் புகைப்படம் இடம்பெறும்.
* வாக்குச்சாவடி முகவர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.