மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 1½ வயது குழந்தை பலி

செஞ்சியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை அவனது பெற்றோர் கண்முன்னே பரிதாபமாக இறந்தான்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்; 1½ வயது குழந்தை பலி
Published on

செஞ்சி, 

செஞ்சி அருகே தேவதானம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 27). இவரது மனைவி புஷ்பா (25). இவர்களுக்கு ஜெயந்த் (1) என்கிற மகன் இருந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அய்யப்பன் தனது மனைவி மற்றும் மகனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு செஞ்சியில் நடைபெறும் உறவினர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கு நிகழ்ச்சி முடிந்ததும், அவர்கள் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். செஞ்சி கோட்டை அருகே சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயந்த், அவனது பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். காயமடைந்த புஷ்பா சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு புஷ்பாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com