பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீதான வழக்கு: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - த.வெ.க. நிர்வாகி புகழேந்தி

அதிமுகவில் 25 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாகவே உள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார்.
பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் மீதான வழக்கு: மீண்டும் விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவு - த.வெ.க. நிர்வாகி புகழேந்தி
Published on

கோவை,

பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் செய்தது திட்டமிட்ட கொலை என்றும், விபத்து வழக்காக பதிவு செய்யப்பட்ட வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் த.வெ.க. நிர்வாகி புகழேந்தி பேசியுள்ளார்.

ஜனநாயகன்

கோவை உடையாம்பாளையம் பகுதியில் அதிமுக, அமமுக, ஓபிஎஸ் அணிகளில் இருந்து விலகி, தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தேர்தலுக்கு முன்பே வர வேண்டிய படத்தை தடை செய்திருந்தனர். ஜனநாயகன் பார்த்து மகிழ்ந்தேன். பல அமைச்சர்கள் கண்ணீர் உருக்கமாக இருந்தது. இப்படி வெளியீட்டை விழாவாக எடுக்க ஆனந்த் கூறியிருந்தார். அடிமைப்பெண் வெளியானபோது ஊர்வலமாக சென்று பார்த்தேன். அந்த நியாபகம் வந்தது. இப்போது படம் வந்துள்ளதால். தடை செய்தவர்களுக்கு வயிறு எரிந்திருக்கும்.

25 எம்எல்ஏக்களும்

உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் தெருவில் அலையப்போகிறார்கள். முதல்-அமைச்சர் குறித்து இழிவாகப் பேசுகிறார்கள். அவர்களுக்கு மனநலக் கோளாறா என்று தெரியவில்லை. இதேபோல் பேசினால் சட்டம் அதன் கடமையை செய்யும், சிறை கதவுகளுக்குப் பின் இருக்கும் நிலை ஏற்படும்.

அதிமுக முற்றிலுமாக அழிந்துவிட்டது. அதிமுகவில் இருந்து வெளியேறுபவர்களை அரவணைத்துக் கொண்டு செல்கிறார் விஜய். அதிமுகவில் யாரும் இருக்கப்போவதில்லை. அதிமுகவில் 25 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவாகவே உள்ளார்கள். இதனை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.

கொலை வழக்கு

நீண்ட ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் 4 மாணவிகளுடன் காரில் சென்று விபத்தில் சிக்கினார். அப்போது மற்றவர்களை விட்டுவிட்டு பிரவீன் மட்டும் ஓடிவிட்டார்.

2 நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்தில் சரணடைந்தார். அப்போது ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்தார். அந்த விபத்தில் சிக்கிய வீரசுரேகா என்ற பெண் கொடுத்த வாக்குமூலத்தை அரசு எடுத்துக்கொள்ளாமல் பிரவீனை தப்பவிட்டார்கள். இது கொலை என்று கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட பிரவீனுக்கு கட்சியில் பொறுப்பு கொடுத்துள்ளனர்.

சகுனிகள்

எடப்பாடி பழனிசாமி பக்கத்தில் மதுரை, கிருஷ்ணகிரி, பொள்ளாச்சி, திருவண்ணாமலையில் சகுனிகள் உள்ளனர். நேற்று அதிமுக கூட்டத்தில் சி.வி. சண்முகம், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.

ஜெயராமனுக்கு நாவடக்கம் வேண்டும். கட்சியை தரைமட்டமாக்கிவிட்டீர்கள்.வீர சுரேகா என்று பெண்ணிற்காக நான் பெண்களைத் திரட்டி போராட்டம் நடத்துவேன்.பொள்ளாச்சி சம்பவம், தூத்துக்குடி சம்பவங்களை சி.பி.ஐ. தான் கண்டுபிடித்தது. அப்போது இருந்த அதிமுகவும் செய்யவில்லை, அதன்பிறகு வந்த திமுகவும் செய்யவில்லை இருவரும் கூட்டுகளவாணிகள்.எடப்பாடி பழனிசாமி நாசமாகப் போக பொள்ளாச்சி ஜெயராமன் தான் காரணம்.

மோடிக்கு பெரிய அடி

முறைத்துக்கொண்டிருக்கும் எம்எல்ஏக்களின் கால்களில் விழுந்து புதிய தலைமையை உருவாக்கினால் மட்டுமே அதிமுக மீண்டும் உயிர் பெறும்.ஒன்று எடப்பாடி பழனிசாமியை தூக்கி எரிவார்கள் அல்லது அனைவரும் தவெகவுக்கு வருவார்கள். ஜனநாயகன் படத்திற்கு அதிக விலையில் டிக்கெட் விற்கவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம். த.வெ.க.வுக்கு வருவோர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூப்பிக்க வேண்டும். அதற்கு தவெக அரசு துணை நிற்காது.

டெல்லியில் நடைபெறும் போராட்டம் பாராட்டிற்கு உரிய விஷயம். இது மோடிக்கு பெரிய அடி. இதில் இருந்து மோடி வெளியே வரமுடியாது. படம் பல தடைகளுக்கு பின் வந்துள்ளதால் அமைச்சர்கள் சென்று பார்த்தனர். மாணவர் போராட்டம் நடந்தால் ரோட்டில் யாரும் நடக்கக்கூடாது என்றால் எப்படி?

இவ்வாறு புகழேந்தி கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com