டாஸ்மாக் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு


டாஸ்மாக் சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 12 Nov 2024 12:42 PM IST (Updated: 12 Nov 2024 12:48 PM IST)
t-max-icont-min-icon

மதுபானங்களை அதிக விலைக்கு விற்பனை செய்யும் டாஸ்மாக் கடை விற்பனையாளர் மட்டுமல்லாமல் அனைத்து பணியாளர்களையும் பணியிடை நீக்கம் செய்வது தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், " 18 ஆண்டுகளாக பணியாற்றி வரும் 24 ஆயிரத்து 986 ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்படாத நிலையில் தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது.

காலனி ஆதிக்கத்தில் தான் இதுபோல தனிப்பட்ட நபர்களின் தவறுகளுக்கு ஒட்டுமொத்தமாக தண்டனைகள் விதிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் தண்டனை விதிப்பது என்பது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்பதால் கடந்த அக்டோபர் 29-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் அதற்கு தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தபோது, சட்ட விரோதமான சுற்றறிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. டாஸ்மாக் தரப்பை கேட்காமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, வரும் 27 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

1 More update

Next Story