

சென்னை,
முதல்-அமைச்சர் விஜய்யின் சிறப்பு பணி அதிகாரியாக (அரசியல்) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிரபல ஜோதிடராவார். மேலும் த.வெ.க. கட்சியில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். இதற்கான அரசாணையை தமிழக பொதுத்துறை முதன்மைச் செயலாளர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வெளியிட்டார்.
ஜோதிடராக இருந்தவருக்கு அரசு பதவியா? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது. மேலும், அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஜோதிடர் எப்படி அரசியல் ஆலோசனைகள் வழங்குவார் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. அதனை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீர பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.
இந்த நிலையில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை முதல்-அமைச்சர் விஜய்யின் அரசியல் சிறப்பு அதிகாரியாக நியமித்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஆர்.ரதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
எந்த விதிகளையும் பின்பற்றாமல், அறிவிப்பு ஏதும் வெளியிடாமல் இந்த நியமனத்தை செய்திருப்பது சட்ட விரோதம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.