பொரித்த கோழியில் ‘லெக்பீஸை’ காணவில்லை என வழக்கு: ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு


பொரித்த கோழியில் ‘லெக்பீஸை’ காணவில்லை என வழக்கு: ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட்டு உத்தரவு
x

பொரித்த கோழியில் ‘லெக்பீஸை’ காணவில்லை என நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கோயம்புத்தூர்

கோவை,

கோவை ஜி.கே.எஸ். அவென்யூ பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் எடிசன். இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கோவை உப்பிலிபாளையம் மெயின்ரோட்டில் மணிகண்டன் என்பவர் நடத்தி வந்த பிரியாணி கடைக்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந்தேதி குடும்பத்தினருடன் சாப்பிட சென்றேன். தந்தூரி சிக்கன் மற்றும் முழு பொரித்த கோழிக்கு (கிரில் சிக்கன்) ஆர்டர் செய்தேன். அப்போது ஊழியர் கோழி இறைச்சி துண்டுகளை பரிமாறினார்.

பரிமாறப்பட்ட பொரித்த கோழியில் ‘லெக்பீஸ்’ துண்டு எங்கே? என்று கேட்டேன். ஆனால் ஊழியர்கள் இதற்கு உரிய பதில் அளிக்கவில்லை. குறைபாட்டை சரி செய்ய கோரியபோது, குடும்பத்தினர் முன்னிலையில் என்னை மிரட்டினர். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது. வற்புறுத்தியதை தொடர்ந்து ஓட்டல் ஊழியர் சமையலறைக்கு சென்று சில ‘லெக்பீஸ்’ துண்டுகளை தாமதமாக கொண்டு வந்து கொடுத்தார்.

நான் முழு கோழிக்கு பணம் கொடுத்து வாங்கியும் அதில் உள்ள ‘லெக்பீஸ்’ துண்டுகளை திருடி உள்ளனர். ஓட்டலில் விற்பனைக்காக உள்ள படத்தில் உள்ளவாறு கொடுக்காமல் உறுதிமொழியை மீறி உள்ளனர். இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே பில் தொகை ரூ.1,196-ஐ வழங்குவதுடன், மன உளைச்சலுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

மனுவை விசாரணை நடத்திய நீதிபதி தங்கவேலு, உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் ஓட்டல் உரிமையாளர், பாதிக்கப்பட்டவரின் மனஉளைச்சலுக்கு ரூ.10 ஆயிரமும், கோர்ட்டு செலவாக ரூ.5 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். சினிமா பாணியில் கோர்ட்டில் நடைபெற்ற இந்த பிரச்சினை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story