

சென்னை,
போலீஸ் காவலில் உயிரிழந்த ஆகாஷ் குடும்பத்தினர் முதல்-அமைச்சர் விஜய் கான்வாய் வாகனத்தை மறிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தலைமைச் செயலகம் நுழைவாயில் அருகே நேற்று முதல்-அமைச்சர் விஜய் கான்வாய் வாகனம் வந்த போது அங்கு கூடியிருந்த பொதுமக்களில் சிலர் போலீசாரின் பாதுகாப்பு தடுப்புகளை தாண்டி முதல்-அமைச்சரை சந்திக்க வாகனத்தை மறிக்க முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களைத் தடுக்க முயன்ற போது சிலர் போலீசாரை தள்ளிவிட்டு ஓடினார்கள்.
இதில் போலீஸ்காரர் முத்து கணேசுக்கு காலில் காயம் ஏற்பட்டது. மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராம்குமாரை சக போலீஸ்காரர் ஓடும் போது எதிர்பாராதவிதமாக நெஞ்சில் கையால் குத்திவிட்டார். இதனால் நெஞ்சு வலியால் அவதிப்பட்ட அவர் தலைமைச் செயலக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பதற்றமான சூழல் ஏற்பட்டதால் முதல்-அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் முதல்-அமைச்சரை சந்திக்க ஓடி வந்த நபர்களை சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் அவர்கள், கடந்த மார்ச் மாதம் மானாமதுரை போலீஸ் சரகத்தில் காவலில் உயிரிழந்த ஆகாஷின் பெற்றோர் ராஜேஷ் கண்ணன், ஆனந்தி, உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு இளையோர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் போலீசாரிடம், "ஆகாஷ் உயிரிழந்த வழக்கில் 6 போலீசார் மீது வழக்குப்பதிவு மட்டும் செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த வழக்கில் வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்க வந்தோம். போலீசார் அனுமதி மறுத்ததால் தடுப்புகளை மீறி உள்ளே நுழைய முற்பட்டோம்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் முதல்-அமைச்சரின் கான்வாயை மறித்த 8 பேர் மீது கோட்டை காவல் நிலைய போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதன்படி சட்டவிரோதமாக கூடுதல் , அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் , காயம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் B3 கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளாகும். இந்த வழக்கில் ஆகாஷின் தந்தை ராஜேஷ் கண்ணன், தாய் ஆனந்தி உள்ளிட்ட 8 பேரும் கைது செய்யப்பட்டு, நேற்று இரவே ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.