

தாராபுரம்,
தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வரு கிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில், கடந்த 9-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. அதன்படி நேற்று முன்தினத்தோடு வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. மொத்தம் 51 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதனையடுத்து வேட்புமனு பரிசீலனை தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்களில் 22 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.
இதேபோல் சுயேட்சை வேட்பாளர்கள் 13 பேரின் வேட்பு மனுக்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் தாக்கலான 51 மனுக்களில், 22 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மீதமுள்ள 29 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. நாளை (சனிக்கிழமை) மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். அன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்நிலையில் தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக வேட்புமனுத்தாக்கல் செய்ய சென்ற போது அ.தி.மு.க.வினர், சத்தியபாமாவின் காரை தடுத்து நிறுத்தி தாக்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. இவர் உள்ளாட்சித்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்தார்.
சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், அ.தி.மு.க.வில் நிலவி வந்த உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிருப்தி அடைந்தார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதோடு, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தில் (த.வெ.க) அதிகாரப்பூர்வமாக தன்னை இணைத்துக்கொண்டார்.