திருத்துறைப்பூண்டி பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை-ஊழியர் மீது வழக்குப்பதிவு

தனியார் பள்ளியில் ப்ரீகேஜி மாணவனை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருத்துறைப்பூண்டி பள்ளி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை-ஊழியர் மீது வழக்குப்பதிவு.
Published on: 

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை-ஊழியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

தனியார் பள்ளியில் மாணவன் மீது தாக்குதல்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி கச்சேரி சாலையைச் சேர்ந்த கோபிநாத் (வயது 32), டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மகிமா என்கிற மனைவியும் சர்வின்(3) என்கிற ஆண் குழந்தையும் உள்ளனர். சர்வின் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் ப்ரீகேஜி படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளி முடித்து வீடு திரும்பியபோது மாணவன் காயத்துடன் இருந்துள்ளார். இதுகுறித்து பெற்றோர் குழந்தையிடம் கேட்டபோது, ஆசிரியர் மற்றும் பள்ளியில் பணியாற்றும் பெண் உதவியாளர் தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

மாணவனை தாக்கும் சிசிடிவி காட்சி

இதுகுறித்து பள்ளியில் விசாரித்தபோது வகுப்பறையில் இருந்த சிசிடிவி காட்சியை குழந்தையின் தந்தை கோபிநாத் பார்த்துள்ளார். அப்போது குழந்தையின் மீது கடுமையான தாக்குதல் நடத்தியும், குழந்தையின் கைகளை நைலான் கயிற்றால் கட்டி வைத்த பரபரப்பான காட்சியை தனது செல்போன் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

ஆசிரியர், உதவியாளர் மீது வழக்குப்பதிவு

இதுகுறித்து திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தந்தை புகார்மனு அளித்துள்ளார். அந்த புகாரைத் தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையை சேர்ந்த பள்ளி ஆசிரியை பாக்கியலட்சுமி (வயது 26) மற்றும் திருத்துறைப்பூண்டி அண்ணாநகரை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மனைவி செல்வி (உதவியாளர்) ஆகிய 2 பேர் மீதும் 5 பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

பரபரப்பு

பள்ளியில் மாணவனை கொடூரமாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் திருத்துறைப்பூண்டி சுற்று வட்டாரப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X