காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு - அக்டோபர் 11-ல் உத்தரவு

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பான வழக்கு - அக்டோபர் 11-ல் உத்தரவு
Published on

சென்னை,

காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மதுபாட்டில்களை கூடுதலாக ரூ.10-க்கு விற்பனை செய்து, காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும்போது அந்த தொகையை திருப்பிக்கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி இந்த திட்டம் 10 மலைப்பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி இந்த வழக்கில் ஆஜரான வக்கீல்களை ஐகோர்ட்டு கேட்டுக் கொண்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எவ்வாறு அமல்படுத்தலாம் என்பது குறித்த வக்கீல்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும் அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அக்டோபர் 11-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com