

சென்னை,
தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜயின் அறிவுறுத்தலின்படி, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் 10.05.2026 முதல் 31.07.2026 வரை நீட்தேர்வுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் மொத்தம் 65 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாட்டில் நீட்தேர்வுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் குறித்தும், அவற்றின் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனடிப்படையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு அரசு இவ்வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்து கவனமுடன் பரிசீலனை செய்து, நீட் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 1,800 நபர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 65 குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறுவதற்கான உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.