த.வெ.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து வழக்குகள்.. ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

த.வெ.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.
த.வெ.க., அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெற்றியை எதிர்த்து வழக்குகள்.. ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
Published on

சென்னை,

ராயபுரம் த.வெ.க. எம்.எல்.ஏ. விஜய் தாமு, கன்னியாகுமரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், ராஜினாமா செய்த அம்பாசமுத்திரம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ஆகியோரின் வெற்றியை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

விஜய் தாமு

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இந்த தேர்தலில், சென்னை ராயபுரம் தொகுதியில் த.வெ.க. சார்பில் போட்டியிட்ட 3 கே.வி.விஜய் தாமு, தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சுபேர் கானை விட 14 ஆயிரத்து 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

த.வெ.க., எம்.எல்.ஏ. விஜய் தாமுவின் வெற்றியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சுபேர் கான் சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதேபோல கன்னியாகுமரி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தளவாய் சுந்தரம், தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேசை விட, 214 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் வழக்கு

தளவாய் சுந்தரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. வேட்பாளர் ஆர்.மகேஷ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அம்பாசமுத்திரம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்று, தற்போது ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை செல்லாது என அறிவிக்கக்கோரி அந்த தொகுதி வாக்காளர் காந்திமதி நாதன் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

ஊழல்

அதில், “இசக்கி சுப்பையா, காங்கிரஸ் வேட்பாளர் துரையைவிட 10 ஆயிரத்து 245 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். தற்போது அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்ற போதும், ஊழல் நடவடிக்கை மூலம் அவர் வெற்றி பெற்றுள்ளார்” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வர உள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com