

சென்னை,
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிகளிலேயே சாதிய வன்மம் தலைதூக்குவது வெட்கக்கேடானது என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார். இது குறித்து, முன்னாள் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் கீழவெளி அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டியலின ஆசிரியர்களை தனிமைப்படுத்தி சாதிய பாகுபாடு காட்டியதோடு, ஆய்வக உதவியாளரின் மேஜையில் மனிதக் கழிவை வீசியதாக கூறப்படும் சம்பவம் கடும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய மனிதநேயமற்ற செயல்கள் வன்மையான கண்டனத்திற்குரியவை!
வேங்கை வயல் சம்பவத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்காத நிலையில், கல்வி நிலையங்களிலேயே சாதிய பாகுபாடும், தீண்டாமை கொடுமைகளும் தொடர்வது தமிழகத்தின் சமூகநீதி கொள்கைக்கே விடப்பட்ட சவாலாகும். சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் கற்றுத்தர வேண்டிய பள்ளிகளிலேயே சாதிய வன்மம் தலைதூக்குவது வெட்கக்கேடானது.
தவெக ஆட்சியில் சமூக நீதித்துறை ஒன்றை உருவாக்கியதையே மறந்து விட்டு அரசும், அத்துறையின் அமைச்சரோ காட்டுக்குள் ரீல்ஸ் ஷூட் செய்வதிலேயே பிசியாக இருக்கும்பட்சத்தில் சமத்துவத்தையும், சமூக நீதியையும் இந்த ஆட்சியில் எப்படி எதிர்பார்க்க முடியும்?
சாதிய பாகுபாட்டிற்கு இனி எங்கும் இடமளிக்காத வகையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என அமைச்சர் வன்னியரசுவை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.