சாதிவாரி கணக்கெடுப்பு: தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க முடிவு - மாணிக்கம் தாகூர் பாராட்டு

தமிழ்நாடு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு சமூகநீதிக் களத்தில் மிக முக்கியமான மைல்கல் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

முதல்-அமைச்சருக்கு பாராட்டு

இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் சமூகநீதி ஆணையம் அமைக்கத் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ள முதல்-அமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக முக்கியமான மைல்கல்

சாதிவாரிக் கணக்கெடுப்பை வெறும் தேர்தல் காலக் கண்துடைப்பாக மாற்றி வரும் மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு மத்தியில், அந்த ஏமாற்று வேலைகளுக்கு இடமளிக்காமல் தமிழ்நாடு அரசு உண்மையான அக்கறையோடு இத்தகைய தீர்க்கமான முடிவை எடுத்து நேரடியாகக் களமிறங்கியுள்ளது போற்றத்தக்கது.

மக்கள் தலைவர் ராகுல் காந்தி நாடெங்கும் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியத்தை ஓங்கி ஒலித்து வரும் வேளையில், தமிழ்நாடு எடுத்துள்ள இந்த முன்னெடுப்பு சமூகநீதிக் களத்தில் மிக முக்கியமான மைல்கல்.

இக்கணக்கெடுப்பில் எந்தவொரு சமுதாயமும் புறக்கணிக்கப்படாமல், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சாதிகள், உட்பிரிவுகள் மற்றும் விளிம்புநிலை சமூகங்களின் பெயர்களும் கணக்கெடுப்புப் பட்டியலிலும் படிவங்களிலும் வெளிப்படையாக முழுமையாக இடம்பெறுவதை ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதுவரை இந்தியாவிலேயே தெலங்கானா காங்கிரஸ் அரசு மட்டுமே முன்னெடுத்து வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ள விரிவான சாதிவாரி கணக்கெடுப்பு மாதிரியைப் பின்பற்றி, ஒரு பிரிவும் விடுபடாத வகையில் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கள ஆய்வு நெறிமுறைகள் மூலம் இக்கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும்.

பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும்

இந்த வரலாற்று முயற்சி வெறும் 69% இடஒதுக்கீட்டைப் பாதுகாப்பதோடு மட்டும் சுருங்கிவிடாமல், தமிழ்நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களையும் 100% முழுமையாகவும் துல்லியமாகவும் உள்ளடக்கிய மக்கள் திரள் ஆய்வாக அமைய வேண்டும். விளிம்புநிலை மக்களின் சமூக, பொருளாதார, கல்விக் கட்டமைப்பைத் துல்லியமாக வெளிக்கொணர்ந்து, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் சமூகநீதியையும் நிலைநாட்ட இந்த ஆணையத்தின் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X