

சென்னை,
பள்ளி மாணவர்களுக்கு சாதி பெயருடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாக தகவல் பரவிய நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
“அமைச்சர் செங்கோட்டையன் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி பெயர் கட்டாயமாக இடம்பெறாது. ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பதுதான் தமிழ்நாடு அரசின் கொள்கை. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதே எங்கள் நிலைப்பாடு.
முந்தைய காலத்தில் சாதி சான்றிதழை காகிதத்தில் வழங்கினார்கள். அது எளிதில் சேதமடைந்துவிடும் என்பதால், சாதி சான்றிதழை காகிதமாக இல்லாமல் அட்டையில் வழங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறதே தவிர, மாணவர்களின் அடையாள அட்டைக்கும் சாதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.