சி.பி.ஐ. விசாரணை: டெல்லி சென்றடைந்தார் த.வெ.க. தலைவர் விஜய்

மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் விஜய் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
சென்னை,
த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவினர் கண்காணித்து வரும் நிலையில், சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கடந்த மாதம் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கட்சியின் இணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் ஆகியோரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அதனை தொடர்ந்து கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதில் 12-ந்தேதி காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதனையடுத்து த.வெ.க. தலைவர் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் கடந்த 12-ந்தேதி விசாரணைக்கு ஆஜரானார். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் கரூரில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது யார்? உங்களுக்கு அனைத்து தகவல்களும் தெரிவிக்கப்பட்டதா?, நிகழ்ச்சிக்கு செல்ல பல மணி நேர தாமதம் ஏன்?, கூட்டம் அதிகரித்தபோது கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தீர்களா?, கூட்ட நெரிசல் பற்றி எப்போது அறிந்தீர்கள்? இதுகுறித்து நிர்வாகிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லையா?, தண்ணீர், பாதுகாப்பான நுழைவு, வெளியேறும் வழி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டதா?’ என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை விஜய்யிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் கேட்டனர்.
அனைத்து கேள்விகளுக்கும் விஜய் விளக்கம் அளித்ததாக தெரிகிறது. தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணை முடிந்த நிலையில் அவர் சென்னை திரும்பினார். அவர் அடுத்தகட்ட விசாரணைக்காக பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு நாளை (ஜன.19-ம் தேதி) டெல்லியில் மீண்டும் ஆஜராக வேண்டும் என சி.பி.ஐ. சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் சி.பி.ஐ. விசாரணைக்காக 2-வது முறையாக த.வெ.க. தலைவர் விஜய் இன்று மாலை 4 மணிக்கு தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், விஜய் தற்போது டெல்லி சென்றடைந்துள்ளார்.






