சி.பி.ஐ. விசாரணை: த.வெ.க. தலைவர் விஜய் இன்று டெல்லி செல்கிறார்

கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
சி.பி.ஐ. விசாரணை: த.வெ.க. தலைவர் விஜய் இன்று டெல்லி செல்கிறார்
Published on

சென்னை,

கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கரூரில் பொதுமக்கள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகளிடம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர். த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, இணைச் செயலாளர் நிர்மல்குமார், கரூர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்டோர் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று நாள் விசாரணையிலும் அவர்கள் பங்கேற்று ஆதாரங்களை வழங்கினர். மேலும் விஜய்யின் பிரசார வாகன டிரைவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விஜய்க்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி, 12-ந்தேதி (இன்று) நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது.

இதன்படி விஜய் இன்று காலை 7 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறார். டெல்லி சென்றதும் அவர் காலை 11 மணிக்கு சி.பி.ஐ. அலுவலகத்துக்கு செல்கிறார். சி.பி.ஐ. விசாரணையில் விஜய்யிடம், கரூர் சம்பவம் தொடர்பாக பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில் விஜய் டெல்லி வருவதையொட்டி அவருடைய ரசிகர்கள், த.வெ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் டெல்லி சி.பி.ஐ. அலுவலகம் முன்பு பெரும் கூட்டம் திரளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் த.வெ.க. சார்பில் மத்திய அரசிடம் பாதுகாப்பு கோரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com