கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - ஏராளமானோர் பங்கேற்பு

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நள்ளிரவு முதல் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
Published on

சென்னை,

கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்கள், கிறிஸ்து பிறப்பை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்கள் தற்போது மின்னொளியில் ஜொலித்து வருகின்றன. ஆட்டு கொட்டகையில் இயேசு பிறந்ததை சித்தரிக்கும் வகையில் பெரும்பாலான தேவாலயங்களில் குடில் அமைக்கப்பட்டு உள்ளது.

வேளாங்கண்ணி தேவாலயம், சென்னை சாந்தோம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் கூட்டு திருப்பலி நடந்தது. இதில் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கையில் ஏந்தி இயேசு பிறப்பு அறிவிக்கப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்தும், ஒருவருக்கொருவர் வாழ்த்துச் சொல்லியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி, பிரார்த்தனை ஆகியவை தொடர்ந்து நடந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் இந்நாளில் எளிய மக்களுக்கு உதவிகளையும் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கிறிஸ்துமஸ் விழாவையொட்டி சென்னை கிண்டி அருகே பரங்கிமலையில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க புனித தோமையார் தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்துமசையொட்டி மதுரை கீழவாசலில் பழமை வாய்ந்த தூய மரியன்னை தேவாலயம் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது.

ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

திருச்சி மேலபுதூர் தூய மரியன்னை பேராலயத்தில் பங்கு தந்தை சவாரி ராஜ் தலைமையில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து வந்தும் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com