

சென்னை,
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை கடைசியில்தான் பாட வேண்டும் என்று மத்திய அரசின் அறிவிப்பாணை வலியுறுத்தவில்லை என்று ஐகோர்ட்டில் கூடுதல் சொலிசிட் டர் ஜெனரல் விளக்கம் அளித்தார்.
சென்னை ஐகோர்ட்டில், அனன்யா ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகள், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி தொடங்குவதும், தேசிய கீதம் இசைத்து நிறைவு செய்வதும் பல ஆண்டுகளாக மரபாக இருந்து வருகிறது. இந்த நடைமுறையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில், அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரமும், தேசிய கீதமும் பாடப்பட்ட பிறகே, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படுகிறது.
அரசு நிகழ்ச்சியை வந்தே மாதரம் பாடியே தொடங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரி 28-ந்தேதி சுற்றறிக்கை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், மாநில பாடலைப் பாடி அரசு நிகழ்ச்சியைத் தொடங்க தடை எதுவும் விதிக்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது வெறும் சடங்கு அல்ல. அது தமிழர்களின் உணர்வு, கலாசாரம். அடையாளமாகும்.
எனவே, வந்தே மாதரம் பாடலை முதலில் பாட வலியுறுத்தி, மத்திய அரசு பிறப்பித்த சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் இந்த கலாசார மோதலை தவிர்க்கும் வகையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடுவதற்கு தகுந்த நிர்வாக அறிவுறுத்தல்களை பிறப்பிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பிரபாகரன் ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, "மத்திய உள்துறை அமைச்சகம் புதிய அறிவிப்பாணையை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல.
மேலும், மத்திய அரசின் அறிவிப்பாணையை தவறாக புரிந்துகொண்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசின் அறிவிப்பாணையின்படி, அரசு நிகழ்ச்சிகளில் முதலில் வந்தே மாதரம் பாடல் பாட வேண்டும். அதை தொடர்ந்து தேசிய கீதம் பாடல் பாட வேண்டும்.
இந்த 2 பாடல்களுக்கு இடையே வேறு எந்த பாடல்களும் பாடக்கூடாது. இந்த 2 பாடல்களும் அடுத்தடுத்துப் பாட வேண்டும் என்று கூறியுள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு முன்னுரிமை அளிக்கக்கூடாது என்று கூறவில்லை. கடைசியில்தான் பாட வேண்டும் என்றும் கூறவில்லை. மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை இறுதியில் பாட வேண்டும் என அறிவிப்பாணையில் வலியுறுத்தவில்லை" என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.