கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக்குழு ஆலோசனை நடத்தியது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை; முதல்வர் பழனிசாமியுடன் மத்தியக் குழு ஆலோசனை
Published on

சென்னை,

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்தில் நேற்று புதிதாக 4,231 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா தலைமையில், தமிழகத்துக்கான மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி ராஜேந்திர ரத்னு, மின்னணு மருத்துவ ஆவண இயக்குனர் டாக்டர் ரவீந்திரன், மத்திய நோய் பரவல் தடுப்பு நிபுணர்கள் சுகாஸ் தந்துரு, பிரவீன், ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாகு, சதீஷ் ஆகிய 7 பேர் கொண்ட மத்திய சுகாதார குழுவினர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர்.

அவர்கள் நேற்று காலை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள். அதன்பிறகு மத்திய குழுவினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டு அறிந்தனர்.

பின்னர் மாலை 4 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து, தமிழகத்தில் நோய்த் தொற்றின் நிலை, மருத்துவ வசதிகள், கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தேனி, ராணிப்பேட்டை, ஆகிய 11 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், மத்தியக்குழுவினர் முதல்வர் பழனிசாமியுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டனர். தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com