சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை


சென்னையில் செயின் பறிப்பு: கொள்ளையர்களின் புகைப்படங்களை வெளியிட்டது காவல்துறை
x

ஜாபர், சல்மான், அஜ்மல்

தினத்தந்தி 26 March 2025 2:18 PM IST (Updated: 26 March 2025 5:14 PM IST)
t-max-icont-min-icon

3 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான்.

சென்னை,

சென்னையில் நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் ஆகிய இடங்களில் நேற்று சங்கிலித் தொடர் போல அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இதனால், உஷார் அடைந்த போலீசார், ஆங்காங்கே, இரும்பு தடுப்பு அமைத்து சோதனை மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கும் தகவல் பறந்தது.

யாராவது கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் செல்ல டிக்கெட் கேட்டால், அதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது. போலீசார் தெரிவித்தது போல் ஐதராபாத் செல்லும் விமானத்திற்கு கடைசி நேரத்தில் 2 பேர் டிக்கெட் எடுத்துக்கொண்டு விமானத்துக்குள் சென்றனர். போலீசார் சந்தேகத்தின் பேரில் விமானத்துக்குள் அனுமதி வாங்கிச் சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனடியாக அவர்களை கைது செய்த போலீசார், விமானத்தைவிட்டு இறக்கி வெளியே கொண்டுவந்தனர். அதே நேரத்தில் சென்டிரலில் இருந்து ரெயிலில் தப்பிச்செல்ல முயன்ற மற்றொரு கொள்ளையன் ஆந்திரா அருகே கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், அவர்களை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றபோது, அதில் குலாம் என்பவர் தப்பிசெல்ல முயன்று போலீசாரை நோக்கி சுட்டபோது, பதிலுக்கு சுட்டதில் போலீஸ் துப்பாக்கி குண்டுக்கு இரையானார்.

இன்னும் இந்த கொள்ளை சம்பவத்தில் 20 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி காட்சிகளை வைத்தே குற்றவாளிகளைப் பிடித்தோம். விமானத்தை நிறுத்தி வைத்து, அதில் இருந்து குற்றவாளிகளைக் கைது செய்தோம். உடைகளை மாற்றியுள்ளனர், ஆனால் ஷுக்களை மாற்றவில்லை, அதை வைத்து தான் கண்டு பிடித்தோம். தேடப்படும் குற்றவாளிகளில் டாப் 3ல் குற்றவாளி ஜாபர் இருந்தார். மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட குலாம் 2 ரவுன்ட் சுட்டது, போலீஸ் வாகனத்தில் பட்டது. தற்காப்புக்காக போலீஸ் ஒரு முறை சுட்டனர். தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்டர் நடந்தது" என்று போலீஸ் கமிஷனர் அருண் கூறியிருந்தார்.

இந்நிலையில் சென்னையில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜாபர் என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், சல்மான் ரெயிலிலும், அஜ்மல் விமானத்திலும் வைத்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story