தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
Published on

சென்னை,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த மாதம் (நவம்பர்) 24-ந்தேதி வங்ககடலில் உருவான நிவர் புயலும், அதன் தொடர்ச்சியாக வங்ககடலில் அடுத்து உருவான புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் கொட்டியது.

அதன்பின்னர், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் வறண்ட வானிலையே பெரும்பாலான இடங்களில் நிலவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் (புதன்கிழமை), நாளையும் (வியாழக்கிழமை) சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் என்.புவியரசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்ககடல் பகுதியில் இலங்கைக்கு கிழக்கே வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

அதேபோல், ஏனைய கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும், உள்மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com