ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - விஜய் சந்திப்பு: இருவரும் பேசியது என்ன..?

முதல்-அமைச்சர் விஜய், விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு - விஜய் சந்திப்பு: இருவரும் பேசியது என்ன..?
Published on: 

சென்னை,

சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்து ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் கலந்தாலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணா நதிநீர்

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (13.10.2026) ஆந்திரப் பிரதேச மாநிலம், விஜயவாடாவில் ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி என். சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்து, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும், சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவிப்பது குறித்தும் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

விருந்தோம்பல்

இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கிடையேயான சிறந்த ஒத்துழைப்பிற்கு வழிவகுக்கும் இந்த நல்வாய்ப்பிற்கும், விஜயவாடாவில் அளிக்கப்பட்ட சிறப்பான விருந்தோம்பலுக்கும் ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அவர்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

மேலும், இரு மாநிலங்களுக்கிடையேயான பொதுவான நலன் சார்ந்த விவகாரங்கள், குறிப்பாக, நீர்ப் பாதுகாப்பு தொடர்பான பொருண்மைகளில் மாநிலங்களுக்கிடையேயான ஒத்துழைப்பைத் தமிழ்நாடு அரசு மிகவும் முக்கியமானதாகக் கருதுவதாகத் தெரிவித்தார்.

கோதாவரி - காவிரி இணைப்புத் திட்டம்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள், தமிழ்நாடு இயல்பாகவே மேற்பரப்பு நீர் வளங்களில் (Surface water resources) பற்றாக்குறை உள்ள ஒரு மாநிலம் என்பதுடன், தனது நீர்த் தேவைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக அண்டை மாநிலங்களையே சார்ந்திருக்கிறது என்றும், கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டமானது, இரு மாநிலங்களுக்கும் மேற்பரப்பு நீர் (Surface water) இருப்பை அதிகரிப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நீண்டகால வாய்ப்பாக அமைகிறது என்றும் தெரிவித்தார்.

மேலும், இத்திட்டம் அனைத்து தென்னிந்திய மாநிலங்களுக்கும் பயனளிப்பதுடன், விவசாயத்திற்கு உறுதுணையாக இருந்து, குடிநீர்ப் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் என்று தெரிவித்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இத்திட்ட முன்மொழிவை முன்னெடுத்துச் செல்லுமாறு மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொண்டதோடு, இத்திட்டத்தைத் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்குமாறு இந்தியப் பிரதமர் அவர்களிடம் தான் ஏற்கெனவே கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சென்னை மாநகருக்குக் கூடுதலாக கிருஷ்ணா நதிநீரை விடுவித்தல்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இச்சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கு, குறிப்பாகச் சென்னைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கிருஷ்ணா நதிநீரை கூடுதலாக விடுவிப்பது குறித்தும் ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார்.

கால்வாய் மூலம் வழங்கப்படும் கிருஷ்ணா நீர், சென்னையின் குடிநீர்ப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும், இன்றைய நிலவரப்படி, சென்னையின் ஐந்து குடிநீர்த் தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவில் தற்போது சுமார் 35 சதவீதமே உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், நடப்பு நீர் ஆண்டில், கூடுதலாக தண்ணீரை விடுவிக்குமாறு ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அவர்களை தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீ கனகதுர்கா திருக்கோவில்

இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர் ந. ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் ஆந்திரப் பிரதேச அரசின் சார்பில் மனிதவள மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் பொங்குரு நாராயணா, நீர்வளத் துறை அமைச்சர் நிம்மாலா ராமா நாயுடு, நாடாளுமன்ற உறுப்பினர் மகுண்டா ஸ்ரீனிவாசுலு ரெட்டி, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் தலைமைச் செயலாளர்கள், நீர்வளத்துறை அரசுச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆந்திரப் பிரதேச மாநில முதல்-மந்திரி அவர்களுடன், தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் புன்னமி காட் பகுதியில் நடைபெற்ற 'விஜயவாடா உத்சவ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முன்னதாக, தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனகதுர்கா திருக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com